நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: சிபிசிஐடி வெளியிட்ட 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை...ஆதார் ஆணையம் பரபரப்பு தகவல்.!!!

பெங்களூரு: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில்  ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும்தான் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடங்கிய விசாரணை  நீண்டு கொண்டே போன நிலையில் இதுவரை 5 மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் 6 பேர் மற்றும் ஒரு இடைத் தரகர் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்குமே நீதிமன்றம் ஜாமின் வழங்கிவிட்டது.

இருப்பினும், விசாரணை விறுவிறுப்படைந்து வந்த நிலையில், நீட் ஆள்மாறாட்டம் செய்து யார் யாரெல்லாம் தேர்வு எழுதினார்களோ அவர்களின் புகைப்படத்தையும், கைரேகையையும் வெளியிட்டனர். அவர்களின் பெயர், முகவரி குறித்து  விவரம் தெரிந்தால் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 10 பேரின் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக ஆதார் அட்டையை தயாரிக்கும் பெங்களூரில் உள்ள உதய் நிறுவனத்தின் உதவியை சிபிசிஐடி   நாடியது. அவர்களிடம் 10 பேரின் புகைப்படம் மற்றும் கைரேகையை அளித்து இதுபோன்ற நபர்கள் இந்தியாவில் எங்கேயும் இருக்கிறார்களா? என கேட்டு கொண்டது. விரைவில் இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அவர்களை கைது செய்ய  தனிப்படை அமைக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையம் சிபிசிஐடி போலீசுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்த மாணவர்கள் தொடர்பான தகவல்கள் எங்களிடம் இல்லை என்றும் இது தொடர்பான விவரங்களை கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆதார் ஆணையத்தின் பதில், தற்போது இந்த வழக்கில் இது பின்னடைவாகதான் பார்க்கப்படுகிறது. வழக்கின் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ரஷித் இதுவரை கைது  செய்யப்படவில்லை. ரஷித் குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், ரஷித் செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக  சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: