ஓடிடி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துமாறு தொடரப்பட்ட மனு: பதில் தருமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,:ஓடிடி நிறுவனங்களை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதுமன்றம், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு மட்டும் தான் பைரசி பிரச்சனை இருந்து வந்தது. ஒதில் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் படத்தின் பைரசி தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் உடனடியாக வெளியாகின்றன. அவற்றைத் தடுக்க முடியாமல் ஒட்டுமொத்த சினிமாத் துறையினரும் திணறி வருகின்றனர். குறிப்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசுகளும் கூட அதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.இதுகுறித்து மத்திய மாநில அரசிடம் கோரிக்கைகளை பல வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் பைரசி இணையதளங்கள் முற்றிலும் ஒழிக்கப்படாமல் தான் இருந்து வருகிறது.

இதனிடையே, ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாகும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பைரசி வராமல் பார்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த கோலிவுட், பாலிவுட் உட்பட அனைத்து படங்களும் உடனடியாக பைரசியில் வெளிவந்தன. இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்களாலும் பைரசியை கட்டுப்படுத்த முடியாமல் போயிருப்பது திரையுலகத்தினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு அவுட்ரேட் ஆக படங்களை விற்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பங்கு அடிப்படையில் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் எஸ்.சேகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி எனப்படும் இணையதள திரைப்பட நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். இதனால் பட தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்ததோடு, இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: