காஞ்சிபுரம் அருகே பின்பக்க சுவரில் துளைப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வேடல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில், மர்மநபர்கள் துளைப்போட்டு கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கவில்லை. இதனால், ‘‘ஓட்டை போட்டவன் கட்டிங் கூடவா போடல’’ என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பன்னீர் என்பவர், ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், ஊழியர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பின்பக்க சுவர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை, தாலுகா இன்ஸ்பெக்டர் மைனர்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில் மற்றும் பணம் கொள்ளையடிக்கவில்லை என தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையின் சுவரில் துளைப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்பட 2 முறை, இதே டாஸ்மாக் கடையில் இரண்டு முறை கொள்ளை முயற்சிகள் நடந்தது. இதனால், சிசிடிவி கேமரா பொருத்தும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனாலும், இதுவரை கேமரா பொருத்தில்லை. இந்தவேளையில் டாஸ்மாக் கடையில் துளையிட்டு, பணம் கொள்ளை அடிக்கவில்லை. மதுபாட்டில்களையும் எடுத்து செல்லவில்லை என விற்பனையாளர் புகார் அளித்துள்ளார். இதை கேட்ட பொதுமக்கள், ‘‘ஓட்டை போட்டவன் கட்டிங் கூடவா போடல’’ என கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: