ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலை தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) தொடங்க உள்ள மண்டல காலம் முதல் தினமும் 1,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னோடியாக ஐப்பசி மாத பூஜைகளின் போது பக்தர்களை சோதனை அடிப்படையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு கேரள அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைகளில் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது என்றும் சபரிமலை வருவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை நடத்த  வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது

இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 நாளிலேயே 5 நாட்களுக்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். நாளை வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (17ம் தேதி) முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கும். அன்று  முதல் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த 5 நாட்களிலும் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 7 மாதங்களுக்குப் பின்னர் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

* பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஷவர் மூலம் குளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

* தரிசனம் முடித்ததும் பக்தர்கள் உடனடியாக திரும்பி செல்ல வேண்டும். சபரிமலையில் தங்க அனுமதி இல்லை.

* வரும் 17ம் தேதி சன்னிதானத்தில் சபரிமலை, மாளிகைப்புறம் கோயில்களுக்கான புதிய  மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

* புதிய மேல்சாந்திகள் தான் சபரிமலையில் அடுத்த ஒரு வருடத்திற்கு பூஜைகளை நடத்துவார்கள். வரும் 21ம் தேதியுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைகின்றன.

Related Stories: