கழிவுநீரால் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சுகாதார சீர்கேடு: மக்கள் மறியல்

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. அங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு திருவேற்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் விடப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 7 மில்லியன் லிட்டர். கடந்த ஒன்றரை ஆண்டாக சரிவர பராமரிப்பு இல்லை. இங்கு உள்ள கழிவுநீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. இதனால், சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை. இதனையடுத்து, கழிவுநீர் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது. இதனால் வீட்டுக்குள்ளே கழிவுநீர் வெளியேறுகிறது.

மேலும், சில இடங்களில் கழிவுநீர் தெருக்களில் உள்ள மேன்ஹோலில் இருந்து வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதனால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம், சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதாகி உள்ள மின் மோட்டார்களை சீரமைத்து முறையாக செயல்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  சுத்திகரிப்பு நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைய சென்றனர்.

Related Stories: