ராசிபுரம் அருகே கொலை மிரட்டல் விடுத்து 2 சிறுமிகளை 6 மாதமாக சீரழித்த கொடூர கும்பல்: 75வயது முதியவர் உள்பட 7 பேர் போக்சோவில் கைது

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அருகே, வீட்டில் தனியாக இருந்த சகோதரிகளான 2 சிறுமிகளை மிரட்டி 6 மாதமாக பலாத்காரம் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளும், 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளும் உள்ளனர். குடும்ப வறுமையால் சிறுமிகளின் தாய், பகல் மற்றும் இரவில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், தாய் வேலைக்கு சென்ற நிலையில், மதியம் திடீரென சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (75) என்பவர், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ரஞ்சிதபிரியா புகாரின்படி ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமிகளை முதியவர் முத்துசாமி மட்டுமின்றி, அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ், அதே பகுதியை சேர்ந்த  சிவா (எ) சண்முகம்(26), சண்முகம்(45), கணபதி மகன்கள் மணிகண்டன்(30), சூர்யா (23), சுப்ரமணி மகன் செந்தமிழன்(31) மற்றும் வரதராஜ் (55), முதியவர் முத்துசாமி(75) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமிகளின் தாயார் இல்லாத சமயத்தில் அப்பகுதியில் வசிக்கும் 12 பேர், சிறுமிகளை, கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். நேற்று முன்தினம்தான் இந்த விவரம் வெளியாகி, 7 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 5 பேரை தேடி வருகிறோம். சிறுமிகளை மீட்டு, நாமக்கல் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டும் ஐகோர்ட்டில் முறையீடு

மதுரையைச் சேர்ந்த வக்கீல் அருள், நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போக்சோ சட்டத்தை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தாததே, சிறுமிகள் மீதான தொடர் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. எனவே, சிறுமிகள் பாதிப்பை தடுத்திடும் வகையில் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். மனுதாரர் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: