டி வில்லியர்ஸ் அதிரடி அரை சதம் நைட் ரைடர்சுக்கு 195 ரன் இலக்கு

ஷார்ஜா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 195 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் 33 பந்தில் 73 ரன் விளாசி அசத்தினார். ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் குர்கீரத்துக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியில் சுனில் நரைனுக்கு பதிலாக டாம் பான்டன் அறிமுகமானார்.

ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 67 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. படிக்கல் 32 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். பிஞ்ச் 47 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா வேகத்தில் கிளீன் போல்டாக, பெங்களூர் அணி 12.2 ஓவரில் 94 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சற்றே பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், கேப்டன் விராத் கோஹ்லி - டி வில்லியர்ஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக, டி வில்லியர்சின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளிய அவர் 23 பந்தில் அரை சதம் அடித்தார்.

மறு முனையில் கோஹ்லி சற்று நிதானமாகவே விளையாட, விஸ்வரூபமெடுத்த வில்லியர்ஸ் நைட் ரைடர்சுக்கு வில்லனானார். அவரது அநாயசமான பேட்டிங்கால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.

கோஹ்லி 33 ரன் (28 பந்து, 1 பவுண்டரி), டி வில்லியர்ஸ் 73 ரன்னுடன் (33 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 100 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கொல்கத்த பந்துவீச்சில் பிரசித், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கேகேஆர் அணி களமிறங்கியது. டாம் பான்டன், ஷுப்மான் கில் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories: