கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இரு தினங்களுக்கு முன் பாஜ சார்பில் முதல்வர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல்விந்தர் சிங் (43) என்ற சீக்கியரின் தலைப்பாகையை போலீசார் பிடித்து இழுத்து தள்ளி விட்டு, அவரை கைது செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
தலைப்பாகை தட்டி விடப்பட்டதற்கு சிரோன்மணி அகாலி தளம் கட்சி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த போலீசார், சில சிசிடிவி பதிவுகளை வெளியிட்டனர். அதில், தள்ளுமுள்ளுவின் போது பல்விந்தர் சிங்கின் தலைப்பாகை ஏதேச்சையாக கீழே விழுவது போல் உள்ளது.