ஹத்ராஸ் இளம்பெண் சம்பவத்தால் அதிரடி பாலியல் பலாத்கார விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: பெண்களுக்கு எதிராக குற்ற வழக்குகளில் எடுக்கப்பட வேண்டிய கட்டாய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மாநில  அரசுகளுக்கு புதிய ஆலோசனையை அனுப்பி உள்ளது. அதில், பாலியல் பலாத்கார வழக்குகளை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென  உத்தரவிட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும்  பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் கட்டாயம்  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு  மத்திய உள்துறை அமைச்சகம்  புதிய  ஆலோசனைகளை அனுப்பி உள்ளது. 3 பக்க ஆலோசனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் போலீசார் கண்டிப்பாக, இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ்  எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.

* காவல் எல்லைக்கு வெளியில் குற்றம் நடந்திருந்தாலும் எப்ஐஆர் பதிவு செய்ய ேவண்டும்.  

* சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கூட, வழக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்  தேவைகளை காவல் துறையினர் கடைபிடிக்கத் தவறினால், குற்றவியல் நீதி வழங்கப்படுவதற்கு குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய  முடியாமல் போய் விடும்.

* எனவே, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய தாமதித்தாலோ  அல்லது மறுத்தாலோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 173ன் கீழ் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீசார் 2 மாதங்களுக்குள்  முடிக்க வேண்டும். வழக்குகளின் நிலவரம், விசாரணை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாலியல் குற்றங்களுக்கான புலனாய்வு  கண்காணிப்பு அமைப்பு (ஐடிஎஸ்எஸ்ஏ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விசாரணை நிலவரம் கண்காணிக்கப்படும்.

* பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தகவல் தளத்தை பயன்படுத்த  வேண்டும்.

* பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகளை குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் பதிவு பெற்ற அரசு மருத்துவரிடம்  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

* பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து தடயங்களைச் சேகரித்தல், ஆதாரங்களைச் சேகரித்தல் போன்றவற்றில் விசாரணை  அதிகாரிக்கும், மருத்துவர்களுக்கும் ஏற்கனவே போதுமான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி இல்லாவிட்டாலும் மரண வாக்குமூலம் பதிவு

மத்திய உள்துறை அமைச்கத்தின் உத்தரவில், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் இறக்கும் தருவாயில், மரண வாக்குமூலத்தை  எழுத்து மூலமோ அல்லது வாய் மொழியாகவோ கேட்டு இந்திய ஆதாரச் சட்டம் 1872 பிரிவு 32(1) ன் கீழ் போலீசார் பதிவு செய்ய வேண்டும். மரண  வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணமாக அதனை நிராகரிக்கக் கூடாது. நம்பத் தகுந்த ஆதாரமாக  அந்த வாக்குமூலத்தை ஏற்று, குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்,’ என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

2.9 கோடி நவீன அடிமை பெண்கள்

இன்று பெண்கள் சுதந்திரமாக வாழ்வதாக பலர் கூறி வந்தாலும், மனித குலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த காலத்தில்தான் நவீன  அடிமைப் பெண்களின் எண்ணிக்கை இருப்பதாக ஐநா.வின் செய்தி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், அடிமைத்தனத்திற்கு எதிரான  ‘வாக் ஃப்ரீ’ என்ற அமைப்பின் இணை நிறுவனர் கிரேஸ் பார்ரெஸ்ட் சமர்பித்த அறிக்கையில், உலகம் முழுவதும் 2.9 கோடி பெண்கள் நவீன  அடிமைகளாக வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. கிரேஸ் கூறுகையில், ‘‘130 பெண்களில் ஒருவர் நவீன அடிமையாக வாழ்கிறார்.

இவர்களில் 99% பேர்  பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். 84% பேர் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார். 58பேர் கட்டாய  பணியாளர்களாக பாதிக்கப்பட்டவர்கள். மிகவும் பாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலை பெண்கள் கொரோனாவாலும் நவீன அடிமைகளாகி இருக்கிறார்கள்,’’  என்றார்.

Related Stories: