எல்லைக்கு அப்பால் தயார்நிலையில் 300 பேர் காஷ்மீரில் ஊடுருவ முடியாமல் திண்டாடும் பாக். தீவிரவாதிகள்: ராணுவம் கண்காணிப்பால் விரக்தி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்தாண்டு பாகிஸ்தான் எல்லை வழியாக 130 தீவிரவாதிகள் ஊடுருவிய நிலையில், ராணுவம் எடுத்து வரும் கடுமையான  கண்காணிப்பு நடவடிக்கைகளால் இந்தாண்டு 30 தீவிரவாதிகள் மட்டுமே ஊடுருவி உள்ளனர். இந்திய ராணுவத்தின் நகர் லெப்டினெண்ட் ஜெனரல் பிஎஸ் ராஜு, நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் செய்வது கணிசமாக தடுக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டில் 130  தீவிரவாதிகள் ஊடுருவிய நிலையில், ராணுவத்தின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டில் இதுவரையில் 30க்கும் குறைவான தீவிரவாதிகளே  ஊடுருவி உள்ளனர்.

காஷ்மீருக்குள் ஊடுருவல் செய்வதற்காக, எல்லைக்கு அப்பால் தற்போது 250 முதல் 300 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர்.  ஆனால், ராணுவத்தின் தீவிர கண்காணிப்பால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து வருவதால் விரக்தி அடைந்துள்ளனர். ராணுவத்தின்  நடவடிக்கைகள் காரணமாக, தற்போது காஷ்மீரில் பதற்றம் குறைந்துள்ளது. வடக்கு காஷ்மீரை விட தெற்கு காஷ்மீர் அதிகம் பதற்றம் நிறைந்ததாக  இருந்தது. தற்போது, அங்கும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.ராணுவத்தின் முயற்சியால் பல தீவிரவாதிகள் சரணடைந்து உள்ளனர். தீவிரவாதிகள் கொல்லப்படும் பகுதிகளில் அமைதி திரும்பி வருவது அதிகமாகி  இருக்கிறது. இதனால், பஞ்சாயத்து தேர்தல் சுமூகமாக நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சின்கம் பகுதியில், நேற்று முன்தினம் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். ரகசிய தகவலின் பேரில்,  அந்த பகுதியை  ராணுவம் சுற்றி வளைத்தது. உடனே, தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில்  2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டு தீவிரவாதி. அதேபோல், புல்வாமாவிலும் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2  தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கிராமங்கள் மீது தாக்குதல்

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய  ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி வந்த அது, தற்போது எல்லையோர கிராமங்களின் மீது தாக்குதல் நடத்துகிறது. நேற்று முன் தினம்  நள்ளிரவு, கத்வா மாவட்டத்தின் ஹீராநகர் பகுதியிலும், ரஜோரி மாவட்ட கிராமங்களின் மீதும் அது தாக்குதல் நடத்தியது. இதில், 40 வயது பெண்  காயமடைந்தார்.

நவீன துப்பாக்கிகள் பறிமுதல்

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் பகுதியில் சந்தேகத்துகிடமான சில நபர்களின் நடமாட்டம் இருந்தது. அவர்களை மடக்கிப் பிடித்து  சோதனை செய்ததில், அதிநவீன ஏகே 74 ரக துப்பாக்கிகளும், ஏராளமான குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்காக  பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ.யின் உத்தரவுப்படி, இவர்கள் இந்த ஆயுதங்களை கடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: