சமீப காலங்களாக எல்லா விவகாரங்களிலும் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

புதுடெல்லி: ‘சமீப காலமாக அனைத்து விவகாரங்களிலும் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவது உரிமையாக மாறி விட்டது,’ என உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில், வெளிநாடுகளில் இருந்தும்,  நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கை மீறியதாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊர் திரும்பியவர்களால்தான் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை எதிர்த்து,  உச்ச நீதிமன்றத்தில் சில அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில்,  சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மனுதாரர் தரப்பில் குறிப்பிட்டது போன்று, தவறான எந்தவொரு செய்திகளும் ஊடகங்களில் வெளியாகவில்லை,’ என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.  அவரிடம் தலைமை  நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, , ‘‘உங்கள் பதில் மனுவில் முழுமையான தகவல்கள் எதுவுமே இல்லை. நீதிமன்றத்தை உங்கள் இஷ்டப்படி பயன்படுத்த நினைக்க வேண்டாம். கொரோனா பரவலை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புப்படுத்தி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என மத்திய அரசு எப்படி கூறுகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் பதில் மனு மழுப்பலாகவும், உண்மைகளை மறைப்பதாகவும் உள்ளது,’’ என்றார். இதையடுத்து,  அடுத்த விசாரணையின் போது  முழு விவரங்களுடன் புதிய பதில் மனுவை தாக்கல் செய்வதாக மேத்தா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இது போன்ற சம்பவங்களை தடுக்க, கடந்த காலங்களில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?, அதற்கான சட்டங்கள் என்ன? என்பது குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், சமீப காலமாக கருத்து சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் முற்றிலும் எல்லை மீறி வருகின்றன. அதிகம் தவறாக பயன்படுத்தப்படும் உரிமையாக இவை மாறியுள்ளன,’ என்று கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: