பொது இடங்கள், சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்: ஷாகின் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘பொது இடங்கள், சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவது  பொதுமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்,’ என்று டெல்லி ஷாகின் பாக் போராட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் அகதிகளாக வரும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்யும், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. இதை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் 2 மாதங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டம் நடத்தினர். அப்போது, இந்த சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால், டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில், ஷாகின் பாக் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு இருப்பதாகவும், போராட்டத்துக்கு தடை விதிக்கும்படியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், பேச்சுவாரத்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தது. இவர்கள் ஷாகின் பாக் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தியும் அதுவும் பலன் இல்லாமல் போனது.  இந்நிலையில்தான், கொரோனோ வைரஸ் தொற்றை காரணம் காட்டி கடந்த மார்ச் 24ம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ‘டெல்லி ஷாகின் பாக் போராட்டத்தால் மாநிலங்களுக்கு இடையே உள்ள போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஒரு அவசர காலத்திற்கு கூட செல்ல முடியாது சூழல் நிலவி வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்ட தளத்தையே உடனடியாக அங்கிருந்து அகற்ற நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கோரப்பட்டது. இதை பல கட்டங்களாக விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில், நீதிபதிகள் கூறுகையில், ‘‘யாராக இருந்தாலும் தங்களுக்குக்கான அங்கீகாரம் மற்றும் உரிமையை கேட்பதில் தவறில்லை. இருப்பினும், அதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது.

குறிப்பாக, இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாக பொது இடங்கள், சாலைகள், வழிகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். அதனால், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். எதுவாக இருந்தாலும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.  அதனால், வரும் காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர். பின்னர், ஷாகின் பாக் தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

10 நாட்களுக்கு முன்புதான்...

ஷாகின் பாக் போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், இங்கு நடந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக 10 நாட்களுக்கு முன்புதான் 17 ஆயிரத்து 500 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி வடகிழக்கு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளுக்கு கண்டிப்பு

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறுகையில், ‘‘ஷாகின் பாக் போராட்ட விவகாரத்தில் துறை சார்ந்த நிர்வாகங்கள் சரியான முறையில் செயல்பட்டு இருந்தால், நீதிமன்றம் தலையீடு தேவைப்பட்டு இருக்காது. ஆனால், அதனை செய்ய அவர்கள் தவறி விட்டனர் என்றுதான் கூற வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: