கட்சியில் ஒருமித்த கருத்தோடு தான் முதல்வர் வேட்பாளர் தேர்வானார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கட்சியில் ஒருமித்த கருத்தோடு தான் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன். ஒரு பொன்னான நாள். ஒவ்வொரு அதிமுக தொண்டனும், தமிழக மக்களும் எதிர்பார்த்தது யார் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்பது தான்.

கட்சியினரும், மக்களும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில், நாங்கள் ஏற்கனவே சொன்னபடி ஒருமித்த கருத்து வரும். அது நிச்சயமாக ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதன் அடிப்படையில், இன்றைக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர். வழிகாட்டு குழுவில் இடம்பெற்றவர்களில் முதல்வர் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த மாதிரியான கருத்துக்கள் எதுவும் கட்சியில் இல்லை. ஒருமித்த கருத்தோடு, எந்தவித பாகுபாடும் இல்லாமல் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: