பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பொடரோஸ்கா: ஸ்விடோலினா அதிர்ச்சி தோல்வி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிக்கு முன்னேறிய முதல் தகுதிநிலை வீராங்கனை என்ற சாதனையை அர்ஜென்டினாவின் நடியா பொடரோஸ்கா நிகழ்த்தியுள்ளார். கால் இறுதியில் 3வது ரேங்க் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன், 26 வயது) நேற்று மோதிய பொடரோஸ்கா (23 வயது, 131வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக, பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிக்கு முன்னேறிய முதல் தகுதிநிலை (குவாலிபயர்) வீராங்கனை என்ற பெருமை பொடரோஸ்காவுக்கு கிடைத்துள்ளது. மகளிர் ஒற்றையர் 4வது சுற்றில் நேற்று களமிறங்கிய டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா) 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), பாப்லோ கரினோ புஸ்டா (ஸ்பெயின்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: