பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு ஜேடியு 122-பாஜ 121 இடங்களில் போட்டி: முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பாஜ 121 தொகுதிகளிலும் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இங்கு வருகிற 28ம் தேதி தொடங்கி நவம்பர் 3 மற்றும் 7ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜ மற்றும் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டன. இதுதொடர்பாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், “மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜவிற்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து 7 இடங்கள் ஜிதன் ராம் மன்ஜியின் இந்துஸ்தான் அவாம் மோர்சாவிற்கு வழங்கப்படும்” என்றார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ இடையே தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் இந்த தேர்தலில் லோக் ஜனசக்தியானது தனித்து விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜ தலைவர் மற்றும் பெட்டியா எம்பியுமான சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் கூட்டணியானது அப்படியே இருக்கின்றது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக நிதிஷ்குமார் இருக்கிறார். அவரது அனுமதியின்றி கூட்டணியில் யாரும் சேருவதற்கோ, வெளியேறுவதற்கோ இயலாது” என்றார்.

* கூட்டணியில் விரிசல்

பீகாரில் பாஜ-ஜேடியு கூட்டணியை எதிர்த்து லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி களமிறங்குகிறது. இந்நிலையில் மெகா கூட்டணியில் நேற்று விரிசல் ஏற்பட்டது. இக்கூட்டணியில் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி 7 இடங்களை கேட்டிருந்தது. ஆனால் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி 2 தொகுதிக்கு மேல் தர முடியாது என உறுதியாக கூறினார். இதனால் 7 தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக ஜேஎம்எம் கட்சி நேற்று அறிவித்தது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், பாஜ 27 தொகுதிக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

Related Stories: