ஹத்ராஸ் சம்பவம் எதிரொலி உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஓரிரு நாளில் விசாரணை

புதுடெல்லி: ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, உத்திரப்பிரதேசத்தில் 20 கோடி மக்களை காக்க உடனடியாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,” உபி மாநிலத்தை பொருத்த வரையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் புகார் கொடுப்பவர்களை தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளே துன்புறுத்துவது என நிலைமை முற்றிலும் கைமீறி போயுள்ளது. ஹத்ராஸ் சம்பவத்தை தொடர்ந்து அங்கு கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் அதிகாரத்தை அந்த மாநில அரசு இழந்து விட்டது. எனவே உபியில் இருக்கும் சுமார் 20 கோடி மக்களை காக்கும் விதமாக உடனடியாக அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த ஓரிரு நாளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

கடந்த சனிக்கிழமையன்று ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற போது, டெல்லி-உபி எல்லையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை தடுத்த ஹெல்மட் அணிந்த காவல் அதிகாரி ஒருவர், அவரது குர்தாவைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘ஆறுதல் கூறச் சென்ற ஒரு பெண்ணின் உடை மீது, ஒரு ஆண் காவலர் கை வைத்து தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல்துறை விளக்கமளிக்க வேண்டும்’ என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: