காஷ்மீரை சேர்ந்த ‘அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த்’ அமைப்பின் டெல்லியில் தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தீவிரவாதி புர்ஹான் சகோதரன் உட்பட 4 இளைஞர்கள் கைது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காஷ்மீரை சேர்ந்த ‘அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த்’ அமைப்பின் தீவிரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹானின் சகோதரன் உட்பட 4 காஷ்மீர் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவில் செயல்படும் காஷ்மீரை சேர்ந்த தீவிரவாத அமைப்பான அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பில் பணிபுரிந்த காஷ்மீர் தீவிரவாதி சோட்டா புர்ஹானின் சகோதரர் உட்பட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, நான்கு கைத்துப்பாக்கிகள், 120 தோட்டாக்கள், ஐந்து மொபைல்கள் மற்றும் ஒரு காரை போலீசார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தங்களது தீவிரவாத தலைவனின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த செப். 27ம் தேதி டெல்லி வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இதுகுறித்து, பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவு டிசிபி குஷ்வாஹா கூறியதாவது: டெல்லியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான புல்வாமாமை சேர்ந்த அல்தாப் அஹ்மத் தார் (25), இஷ்பாக் மஜீத் கோகா (28), முஷ்டாக் அகமது கனி (27), அகிப் சஃபி (22) ஆகியோர் அடங்குவர். அவர்கள் டெல்லிக்கு வந்தபின், பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர்.

டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக அவர்கள் தங்களது தலைவனின் உத்தரவுக்காக காத்திருந்திருந்தனர். ஆனால், பெரிய அளவிலான தாக்குதல் நடத்தும் முன்னதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால், தீவிரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது. இவர்கள் 4 பேரையும் கைது செய்வதற்கு முன்னதாக அவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓட முயற்சித்தனர். டெல்லியின் ஐ.டி.ஓ அருகே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அவர்களை போலீஸ் படை பிடித்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில்,

இஷ்பாக் மஜீத் கோகா என்பவன் காஷ்மீரில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட புர்ஹான் மஜீத் கோகா அல்லது சோட்டா புர்ஹானின் மூத்த சகோதரன். சோட்டா புர்ஹான் அல்கொய்தா அமைப்பின் காஷ்மீர் தொகுதி ‘அன்சார் கஜ்வத்-உல் ஹிந்தின்’ முன்னாள் தலைவரான இருந்தான். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியனில் அவன் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டான். கைதான இஷ்பாக் தனது சகோதரரின் மரணத்திற்குப் பிறகு, அதே தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்துள்ளான். அவனது உத்தரவின் பேரில் மற்ற மூன்று இளைஞர்களும் தீவிரவாத சம்பவத்தை டெல்லியில் மேற்கொள்ள இங்கு வந்தனர்.

காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத அமைப்பான அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவன், இவர்களை பணம் மற்றும் சில ஆயுதங்கள் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி உள்ளான். இங்கு வந்த இவர்கள், டெல்லியில் உள்ள ஒரு கும்பலிடம் நவீன ஆயுதங்களை விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன், இந்த நான்கு காஷ்மீரிகளும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஐ.டி.ஓ உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து கண்காணித்தோம். அவ்வழியாக சென்ற சந்தேக காரை எங்கள் குழு மடக்கி பிடித்த போது அவர்கள் காரை அங்கேேய விட்டுவிட்டு நடைபாதை வழியாக தப்பி ஓடினர். அப்போது, ஏற்பட்ட மோதலுக்கு பின் நான்கு பேரும் பிடிபட்டனர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: