கடந்த மாதம் பயிற்சி முகாம் தொடங்கியது 3 கிலோ உடல் எடை குறைத்த போலீசார்: ராணிப்பேட்டை எஸ்பி பாராட்டு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் எடை குறைக்க பயிற்சி மேற்கொண்டு 3 கிலோ வரை எடை குறைத்த 27 போலீசாரை எஸ்பி மயில்வாகனன் பாராட்டினார். ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 27 போலீசாருக்கு உடல் எடை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாமினை கடந்த மாதம் 2ம் தேதி எஸ்பி மயில்வாகனன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 27 போலீசாரும் உடல் எடையை குறைக்க பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதில், அவர்கள் 3 கிலோ வரை உடல் எடையை குறைத்தனர். இந்நிலையில், விழிப்புணர்வு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதன் நிறைவு விழா நேற்று ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் நடந்தது. இதில், 3 கிலோ வரை எடை குறைத்த போலீசாரை எஸ்பி மயில்வாகனன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:`உடல் எடையை குறைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு நீங்கள் வழி வகுத்துள்ளீர்கள். வாலாஜா டோல்கேட்டில் பணிபுரியும் போலீசாரிடம் நான் கேட்டபோது பைக்கில் வந்து பணிபுரிந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்கிறோம் என்றனர். நான் அவர்களிடம் உங்கள் எடையைக் குறைக்க நீங்கள் காலையில் நடந்து 5 கிலோ மீட்டர் தூரம் சென்று, மீண்டும் மாலையில் வேலை முடிந்த பிறகு நடந்தே வீட்டிற்கு செல்லலாம்.

அவ்வாறு நீங்கள் பயிற்சி செய்தால் கண்டிப்பாக உங்கள் எடையை குறைக்கலாம் என்றேன். இனிவரும் காலங்களில் இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நாம் அனைவரும் ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும்’. இவ்வாறு அவர் பேசினார். இதில், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் (ஆற்காடு), முகேஷ் குமார் (ராணிப்பேட்டை போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம், சரவணன் உள்ளிட்ட போலீசார் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒரு மாத கால பயிற்சி பெற்று பலன் அடைந்தது குறித்து போலீசார் அனைவரும் விளக்கி பேசினர்.

Related Stories: