பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க உத்தரவிட முடியாது கோவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் கோவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்தேன். வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

2019 மக்களவை தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. மகள் பெயர் மட்டும் பட்டியலில் உள்ளது. இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரர் தொகுதியில் வசிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே மனுதாரரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளிட்டபோது மனுதாரர் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். இதனால் கோவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது. திட்டமிட்டபடி இங்கும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் இந்த முறை 7 சீட்டு முதல் 20 சீட்டுகள் வரை வெற்றி பெறுவோம் என்று அண்ணாமலை கூறி வந்தார். இதற்காக கூட்டணியில் சமுதாய தலைவர்களையும் சேர்த்திருந்தார். அவர்களுக்கு தலா ஒரு சீட்டும் கொடுத்தார். ஆனால் அவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்று தெரியவந்துள்ளதோடு, பலர் 3வது இடத்துக்கு தள்ளப்படுவார்கள் என தெரிய வந்தது. அதில் பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலையும் 3வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாமலை, தனது தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்காளர்களை காணவில்லை என்று புகார் தெரிவித்தார். 3 முறை வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோது தனது கட்சிக்காரர்களை வைத்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் தேர்தல் முடிந்த பிறகு தோல்வி பயத்தில் அவர் இவ்வாறு குற்றம்சாட்டுவதாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில்தான், சுதந்திர கண்ணன், கோவை மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தனக்கு மட்டுமல்லாமல் பெயர் விடுபட்டுள்ள பலருக்கும் வாக்களித்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கூறியிருந்தார்.  இந்த கோரிக்கையை தற்போது ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது

* கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரர் தொகுதியில் வசிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே மனுதாரரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

The post பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க உத்தரவிட முடியாது கோவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: