வட தமிழக உள்மாவட்டங்களில் மே 4ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வட தமிழக உள்மாவட்டங்களில் 4ம் தேதி வரை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்றும் வெப்ப அலை வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 8 மாநிலங்களில் நேற்று கடும் வெப்பம் நிலவியது. குறிப்பாக மேற்கு வங்கத்தின் ஒருசில இடங்களில் 114 டிகிரி வரை வெயில் அதிகரித்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மகாராஷ்ட்ராவில் கண்காடலா பகுதியிலும், ராயலசீமா நந்தியால் பகுதியிலும் 114 டிகிரி, ஒடிசாவின் சில இடங்களில் 114 டிகிரி வெயில் இருந்தது. உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ், பீகாரில் ஷேக்புரா, தெலங்கானா நிசாமாபாத் 111 டிகிரி, மும்பையில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூரில் 109 டிகிரி இருந்தது. திருப்பத்தூர், வேலூர் 108 டிகிரி, மதுரை விமான நிலையம், திருச்சி, சேலம் 106 டிகிரி, கோவை, திருத்தணி, நாமக்கல், தஞ்சாவூர், தர்மபுரி, ஈரோடு 104 டிகிரி, சென்னை 102 டிகிரி, பாளையங்கோட்டை 100 டிகிரி வெயில் இருந்தது.

இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு இன்று முதல் 3ம் தேதி வரை உள்ளது. மேலும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை 4ம் தேதி வரை இயல்பைவிட சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் உயரும் வாய்ப்புள்ளது.  தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இயல்பைவிட வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். 3ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வாய்ப்புள்ளது. அத்துடன் 4ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்பும் உள்ளது.

The post வட தமிழக உள்மாவட்டங்களில் மே 4ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: