சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவு சின்னம்

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்கள் 20 பேருக்கு, போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள இடங்களை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதை கலோனல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய வீரர்கள் தடுக்க முயன்றனர். இது மோதலாக மாறியதால் கற்கள், இரும்பு ராடுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் சீன வீரர்கள். இதனால், பதில் தாக்குதலில் இறங்கிய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினரை போராடி விரட்டினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 18 வீரர்கள் காயமடைந்தனர். சீனாவின் தரப்பில் இதுவரை உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், 35 சீன ராணுவத்தினர் உயிர் இழந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது.

பனிச்சிறுத்தை என்று குறிப்பிடப்படும் இந்த ஆபரேஷனில், போராடி நாட்டைக் காத்தவர்களை கவுரவிக்கும் விதமாகத் தற்போது போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் உயிரிழந்த 20 வீரர்களின் பெயர் விபரங்கள் ‘கல்வானின் மகத்தான கதாநாயகர்கள்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் கலோனல் சந்தோஷ்பாபு உள்ளிட்ட வீரர்களின் பெயரைப் பொறிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: