புதுப்பொலிவு பெறும் திரிவேணி சங்கமம் கடற்கரை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி: முக்கடல் சங்கம பகுதியில் தற்போது  நடைபெற்றுவரும் திட்டப்பணிகளால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி புதுப்பொலிவுப்பெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் தென்கோடி முனையில் புகழ்பெற்ற சர்வேத சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு முன்பு கன்னியாகுமரிக்கு  தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து வந்து சென்று வந்தனர். இதனால் சுற்றுலாப்பயணிகளை மேலும் கவரும் வகையில் ரூ.3 கோடியே 84 லட்சம் செலவில் கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இதன் ஒரு பகுதியாக கடற்கரை பகுதி முழுவதும்  அலங்கார தரை கற்கள் ஓடுகளை பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடற்கரை பகுதியை சுற்றி அலங்கார சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கற்களால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அங்கு சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை எளிதாக அமர்ந்து  காணும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியான திரிவேணி சங்கம பகுதி புதுப்பொலிவு பெற்று வருகிறது. தற்போது வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தராத நேரத்தில், வட மாநில சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரி பகுதிக்கு வரவில்லை.

இந்நிலையில் தமிழ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டும் கன்னியாகுமரிக்கு அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பணிகளை ரசித்து அவர்களை கவரும் வகையில் அமைந்துள்ள பணிகளை  பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: