ரோகித் சர்மா 70, பொலார்டு 47 ரன் குவிப்பு: மும்பை சூப்பர் வெற்றி

அபுதாபி: மும்பை அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் 143 ரன் எடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி படுதோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வினுக்கு பதில் கிருஷ்ணப்பா கவுதம் சேர்க்கப்பட்டார். போன சீசனில் பும்ரா பந்தை கவுதம் சிறப்பாக எதிர்கொண்டதால் அந்த மாற்றம். இதுவரை இந்த 2 அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, தலா 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 5, 6வது இடங்களில் உள்ளன. அதனால் 2வது வெற்றிக்காக களம் இறங்கிய இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக், டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதே நேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். ஆனாலும் அடுத்து வந்த சூரியகுமாரை 10 ரன்னில் ஷமி ரன் அவுட் செய்தார். போன போட்டியில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் கொஞ்ச நேரம் ரோகித்துடன் களத்தில் இருந்தார். அவர் 32பந்துகளில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் 3 விக்கெட்டுக்கு இருவரும் 62ரன் சேர்த்தனர். அதன் பிறகு ரோகித் சர்மா சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பந்துகளை விரட்ட ஆரம்பித்தார். அதிலும் நீஷம் ஓவரில் சிக்சருக்கு அடித்த பந்து காணாமல் போனதால் புதுப்பந்தை எடுத்தனர்.

புதுப்பந்து வந்த சில நிமிடங்களில் ரோகித் ஆட்டமிழந்தார். அவர் 45பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 70 ரன் குவித்திருந்தார். அப்போது மும்பை அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 124ரன் எடுத்திருந்தது. அடுத்து இணை சேர்ந்த பொலார்டும், ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடி காட்டினர். கடைசி வரை களத்தில் இருந்த பொலார்டு 47*(20பந்து, 3பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் 30*(11பந்து, 3பவுண்டரி, 2சிக்சர்) குவித்தனர். அதனால் மும்பை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்தது. அதனையடுத்து 192ரன் எடுத்தால் 2வது வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் தொடர்ந்து விளையாடியது.

எனினும் மும்பை அணியின் பந்து வீச்சில் சீட்டு கட்டு போல சரிந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பூரன்44 ரன் எடுத்தார்.  மும்பை அணி பந்து வீச்சில் வீரர் பும்ரா 26 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்து அசத்தினார்.

ரோகித் சர்மா 5000

ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய முகமது ஷமியின்  முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு  விரட்டினார். அதனால் ஐபிஎல் தொடரில் 5000ரன்னை கடந்த வீரர் என் சாதனையை  ரோகித் நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியுடன் ரோகித்  192 போட்டியில் விளையாடி 5068 ரன் குவித்துள்ளார்.

Related Stories: