நன்றாக பயிற்சி செய்துள்ளோம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங்

துபாய்: ‘தொடர் ஆட்டங்களுக்கு பிறகு கிடைத்த 6 நாட்கள் ஓய்வு, நன்றாக பயிற்சி பெற உதவியது’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்தார்.சிஎஸ்கே அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அடுத்து  போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்சிடமும்,  டெல்லி கேப்டல்சிடமும் தோற்றது. இந்த 3 போட்டிகளும் முறையே செப்.19ம் தேதி அபுதாபியிலும்,  செப்.22ம் தேதி ஷார்ஜாவிலும், செப்.25ம் தேதி துபாயிலும் என ஒரே வாரத்தில்  நடந்தன. தொடர்ந்து 6 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, சிஎஸ்கே தனது 4வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் மோதுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்,‘குறுகிய காலத்தில்  அடுத்தடுத்து 3 ஆட்டங்களில் விளையாடிக் ெகாண்டிருந்த எங்களுக்கு இந்த ஓய்வு சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. முதல் 3 ஆட்டங்களும் வெவ்வேறு மாதிரியாக இருந்தன. என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து அறிய இந்த ஓய்வு நாட்கள் உதவின. இந்த இடைவெளியை நன்றாக பயன்படுத்தி உள்ளோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் சில தெளிவுகள் பிறந்துள்ளன.  கூடவே ஓய்வு நாட்களில் நன்றாக பயிற்சி செய்தோம்.

எங்கள் முதல் 3 போட்டிகளையும் வெவ்வேறு இடங்களில் விளையாடினோம். அடுத்து 5 போட்டிகளில் 4 போட்டிகள் ஒரே நகரில் நடக்க உள்ளன. இது ஒரே இடத்தில் எங்களை நிலைப்படுத்திக் கொண்டு நிலைமைகளை படிக்கவும், பயிற்சி பெறவும் உதவும். கடைசியாக டெல்லிக்கு எதிராக துபாயில் விளையாடியதை விட கூடுதலாக, செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். சில விஷயங்களில் நாங்கள் பின்தங்கி இருக்கிறாம். அவற்றை சரிசெய்வதற்காக கடுமையான உழைத்தோம். அம்பாதி ராயுடு முழு உடல் தகுதியுடன் அணிக்கு திரும்புகிறார். டுவைன் பிராவோவுக்கும் தயாராக இருக்கிறார்’ என்று கூறினார்.

Related Stories: