ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர் மோதல்: கூட்டுறவு சங்கத் தேர்தல் 3வது முறை ஒத்திவைப்பு

மேலூர்: அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் போட்டியிட்டதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர், சந்தைப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று வேட்புமனுக்களை பெற்றுக் கொள்ளலாமென அறிவிக்கப்பட்டது. மேலூரில் அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என 2 அணிகள் உள்ளன. இபிஎஸ் அணியினர் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் தலைமையிலும், ஓபிஎஸ் அணியினர் அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையிலும் இங்கு செயல்பட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் அணியை சேர்ந்த மேலூர் நகர் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் அம்பலம், அவைத்தலைவர் ராஜேந்திரன், உமாபதி, முருகேசன் ஆகியோர், நேற்று தேர்தல் அதிகாரி வினோத்குமாரிடம் மனுக்களை பெற்றனர். பின்னர் இபிஎஸ் அணியின் தற்போதைய எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் அணியினர், மேலூர் ஒன்றிய சேர்மன் பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன், மணிகண்டன் தலைமையில் மனுக்களை பெற வந்தபோது, தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியின் பெயர் மற்றும் கையொப்பம் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்புக்கு, இபிஎஸ் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேலூர் போலீசில் முன்னாள் வேளாண் சங்கத்தலைவர் சாகுல் உட்பட 3 பேர் மீது புகார்மனுக்கள் அளித்தனர்.

இவர்களை தொடர்ந்து அமமுக மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வந்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தல் நடத்தும் அதிகாரியை காணவில்லை என அவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மாலை 5 மணிவரை தேர்தல் அதிகாரி வருவார் என எதிர்பார்த்து அதிமுகவின் இரு அணியினர் மற்றும் அமமுகவினர் அலுவலக வளாகத்தில் காத்திருந்து கலைந்து சென்றனர். வேளாண் அலுவலக வளாகத்தை சுற்றியும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்தல், நேற்று 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>