2024ல் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பீதியை ஏற்படுத்தினாலும் 2025ல் தொடர் தோல்விகளால் துவண்டு போன காங்கிரஸ்: 2026ல் நடக்கும் 5 மாநில தேர்தலை எப்படி எதிர்கொள்ளும்?

 

டெல்லி: தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி மோதல்களால் 2025ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. அதேபோல் உட்கட்சிப் பூசலால், தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி ஆளும் பாஜகவுக்கு பீதியை ஏற்படுத்தியது. அதே இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அங்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே ஆதிக்கம் செலுத்தின. பாஜக ஆட்சியை பிடித்தது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், 2020ம் ஆண்டை விட குறைவான இடங்களையேப் பெற்றது. இதனால் அந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்விகளுக்கு மத்தியில் உட்கட்சி பூசலும் அக்கட்சியைத் தீவிரமாக உலுக்கி வருகிறது.

பீகார் தோல்விக்குப் பிறகு மூத்த தலைவர்கள் மற்றும் ‘ராகுல் அணி’ இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ள அதிருப்தி தலைவர்கள், ‘தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்’ என்றும், ‘தலைமையை மாற்ற வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையேயான அதிகாரப் போட்டி காரணமாக நிர்வாகம் முடங்கியுள்ளதாகவும், இமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு உட்கட்சி எம்எல்ஏக்களின் எதிர்ப்பால் கவிழும் அபாயத்தில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சசி தரூர், திக்விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்கள் ஆளும் பாஜகவை மறைமுகமாக ஆதரித்து கருத்து தெரிவிப்பதும், ராகுலுக்கு பதிலாக பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற குரலும் காங்கிரசுக்குள் அவ்வப்போது எழுவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்தத் தொடர் சறுக்கல் ‘இந்தியா’ கூட்டணியிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக டெல்லி மற்றும் பீகார் தேர்தல்களில் கூட்டணி கிட்டத்தட்ட முறிந்துபோனது. காங்கிரஸ் கட்சியின் ‘அகம்பாவம்’ மற்றும் ‘நடைமுறைக்கு ஒவ்வாத தொகுதி கேட்பு’ ஆகியவையே தோல்விக்குக் காரணம் என ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டின. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால், ஒன்றிய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறின.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை, நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடம் எடுபடவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற மாநிலத் தலைவர்களே ஒன்றிய அரசுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு முடிவடையும் நிலையில், வரும் 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள, கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தலைமை உள்ளது.

Related Stories: