நாதக, தவெக கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு பேச்சு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, தேவாலயங்களை தாக்கிய மதவெறி கும்பலை கண்டித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக தாம்பரம் மாநகர தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் திமுக, காங்கிரஸ், மதிமுக, தமுமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுசெயலாளர் வன்னியரசு, மண்டல குழு தலைவர் டி.காமராஜ், மனித நேய மக்கள் கட்சி துணை பொதுசெயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் கலந்து கொண்டனர். பின்னர் வன்னியரசு கூறுகையில், ‘சீமான் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் சாத்தானுடைய பிள்ளைகள் என்று சொன்னவர். தவெக தலைவர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்கிறார். ஆனால் இன்றைக்கு இவ்வளவு மோசமான ஒரு தாக்குதல் நடந்து இருக்கிறது. விஜய் வாய் திறக்கவில்லை. எனவே மக்கள், நாம் தமிழர், தவெக கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: