களக்காடு மலையடிவாரத்தில் தொடர் அட்டகாசம்: ஒற்றை யானையை விரட்ட முடியாமல் வனத்துறை திணறல்

களக்காடு: களக்காடு தலையணை மலையடிவாரத்தில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். களக்காடு தலையணை மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் யானை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. கடந்த சில நாட்களாக சிவபுரம், புதுக்குளம், கள்ளிகுளம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட ரசகதலி ஏத்தன் வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். பகல் நேரங்களில் கூட விவசாய பணிகளுக்கு விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை எழுந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி இரு குழுக்கள் அமைக்கப்பட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவிலும் கள்ளியாறு பகுதியில் ஒற்றை யானை மீண்டும் புகுந்தது. விவசாயிகள், வனத்துறை ஊழியர்கள் இணைந்து வெடிகள் வெடித்தும், தீப்பந்தங்கள் காட்டியும் யானையை விளைநிலங்களுக்குள் புகாமல் தடுத்தனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட போதிய ஊழியர்களை ஈடுபடுத்தாதால் வனத்துறையினர் திணறி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே போதிய வனத்துறை ஊழியர்களை நியமித்து, யானையை விரட்ட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: