திருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்று சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் நாளான  நேற்று முன்தினம் இரவு வெள்ளை நிற ஆடை, மாலை அணிந்து சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பிரமோற்சவத்தின் 8ம் நாள் காலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக மகா ரதம் வீதியுலா ரத்து செய்யப்பட்டது.  இதனால், நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி, கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில்  அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக புஷ்கரணியில் நடைபெறும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பதில், இன்று காலை கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.  தொடர்ந்து, இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.

Related Stories: