அதிமுக செயற்குழு நாளை கூடும் நிலையில் பாஜ தலைவர்களுடன் டெல்லியில் 2 மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

* முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்கவும்

* ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தவும் கோரிக்கை

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வலியுறுத்தியும், அதிமுக மோதல் விவகாரத்தில் தலையிடக் கோரியும் 2 மூத்த அமைச்சர்கள் நேற்று முன்தினம் டெல்லி சென்று பாஜ தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த தகவல் வெளியானதும் அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். பின்னர் அவரை சசிகலாவின் உறவினர்கள் தனியாக அழைத்து பேசும்போது மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது அவரை பதவி விலக வேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர், ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களை, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், மெஜாரிட்டி எம்எல்ஏக்களை இழுக்க முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 அதைத் தொடர்ந்து, சசிகலா முதல்வராக திட்டமிட்டார். அவர் கூவத்தூரில் இருக்கும்போதே, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதனால் அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். கட்சியை டிடிவி தினகரன் வழி நடத்தத் தொடங்கினார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி.தினகரனுக்கும் மோதல் ஏற்பட்டதால், அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆட்சியை தொடர்ந்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக இருந்தார். அதேநேரத்தில் தனது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் வாங்கிக் கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலையில் இருந்த கே.பி.முனுசாமி, செம்மலை, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் கூட எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு நிலை எடுத்தவுடன் அவர்களுக்கு பதவியும் வழங்கப்பட்டது. இதனால் இரு அணியினருக்கும் இடையேயான மோதல் நீருபூத்த நெருப்பாக இருந்து வந்தது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணியினரும் பிரிந்து, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு நிலவியது.

குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தங்கமணி கூறியதைத் தொடர்ந்தே மோதல் எழுந்தது. இதனால் பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டும் என்று தற்போது அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை எழுப்பத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில் அதிமுக செயற்குழு கூட்டம் நாளை (திங்கள்) காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 300 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை எழுப்ப எடப்பாடி ஆதரவாளர்களும், பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தை எழுப்ப ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இரு அணியின் தலைவர்களும் செயற்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சரான வேலுமணி கடந்த 21ம் தேதி கோவை சென்றார்.

அங்கு இருந்தபடியே கடந்த 5 நாட்களாக எடப்பாடி பழனிசாமி அணிக்காக ஆதரவு திரட்டி வந்தார். நேற்று முன்தினம் பகல் 1.15 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை முடித்தவுடன், நேராக விமானநிலையம் சென்றார். அங்கு, ஏற்கனவே மூத்த அமைச்சர் தங்கமணி காத்திருந்தார். இருவரும் இணைந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றனர். அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக   தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயலை ரகசியமாக சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர் நட்டாவையும் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.  இந்த சந்திப்புகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர்தான் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை 28ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க வேண்டும். இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக மேலிடம் முழு ஆதரவுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜ தலைவர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்கள்தான் கட்சியின் தலைமை பதவியையும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலைதான் தற்போது உள்ளது. இதற்காக பன்னீர்செல்வத்துடன் பாஜ மேலிட தலைவர்கள் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காகவும், இந்த விவகாரத்தில் பன்னீர்செல்வத்தை சமாதனப்படுத்தும்படியும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அமித்ஷாவுக்கு வேண்டிய சில தொழில் அதிபர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் பெங்களூருக்கு விமானம் மூலம் நேற்று காலை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை வந்தனர். இரு அமைச்சர்களும் நேராக முதல்வர் எடப்பாடி  பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் இருவரும் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மீண்டும் அமைச்சர் வேலுமணியின் வீட்டுக்கு தங்கமணி சென்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.  மூத்த அமைச்சர்கள் 2 பேரும் டெல்லிக்கு ரகசியமாக சென்று சென்னை திரும்பியதும், பின்னர் முதல்வர் எடப்பாடியை சந்தித்துப் பேசியதும், அதன்பின்னர் இரு அமைச்சர்கள் மட்டும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டதும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அமைச்சர்கள் இருவரும் டெல்லி சென்ற தகவல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்ததும், தனது ஆதரவு பாஜ தலைவர்கள் மற்றும் தனது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத்குமாரை அழைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்தபடியே கண்காணித்து வந்தார். இதனால், அமைச்சர்கள் டெல்லி விசிட் மற்றும் சென்னையில் ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். கொரோனா காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், அதிமுக கட்சி அலுவலகம் அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் பலரை அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தை நேரடியாக பெரிய டிவி திரை மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பார்வையிட்டு சென்றனர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சந்தித்து திடீரென ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. அதிமுக அவைத்தலைவராக உள்ள மதுசூதனன் தலைமையில்தான் நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மதுசூதனன் கடந்த மாதம் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்து, வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மதுசூதனனை வீட்டில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில் அவரால் தொடர்ந்து அதிமுக அவைத்தலைவராக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் அதிமுகவில் புதிய அவைத்தலைவரை விரைவில் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய அவைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் அல்லது பொன்னையனை நியமிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுபோன்ற ஒரு நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுபற்றி அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மதுசூதனன் அவருக்கு ஆதரவாக இருந்தார். அதனால், அவைத்தலைவர் பதவியில் மதுசூதனன் தொடர்ந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அதிமுக செயற்குழுவில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதேநேரம், வருகிற செயற்குழு கூட்டத்தில் மதுசூதனன் ஆதரவையும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்” என்றார்.

Related Stories: