திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 5ம் நாள்: மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி காட்சி; இன்றிரவு கருடசேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ 5ம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்) பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6.30 மணியளவில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமர்ப்பிக்க உள்ளார்.

தொடர்ந்து பிரம்மோற்சவ முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்றிரவு நடக்கிறது. இதில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கருடசேவையை யொட்டி ஏழுமலையான் கோயில் முழுவதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட பூக்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் சூடிகொடுத்த மாலை

விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிகொடுத்த கிளியுடன் கூடிய மாலை நேற்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், இந்த மாலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, மாடவீதியில் யானைகள் அணிவகுத்து முன் செல்ல ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றிரவு நடைபெறும் கருட சேவையின்போது ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும்.

Related Stories: