கோகுல் ராஜ் கொலை வழக்கு யுவராஜுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 மாதத்தில் வழக்கை முடிக்கவும் உத்தரவு

புதுடெல்லிம்: கடந்த 2015ம் ஆண்டு நடந்த கோகுல் ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்த வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் என தமிழக போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளிப் பாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள திருச்செங்கோடு காவல் நிலைய டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோகுல் ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அப்போது வழக்கில் இருந்து தப்பிக்கொள்ள பல மாதங்களாக யுவராஜ் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தீவிர தேடுதலுக்கு பிறகு யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

இதில் முதலாவதாக சென்னை உயர்நீதிமன்றம் கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு கடுமையாக எதிர்த்தைத் தொடர்ந்து  மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து யுவராஜ் தரப்பில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் யுவராஜூக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ததோடு, வழக்கை விரைந்து முடிக்கவும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கோகுல் ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கு ஜாமீன் வழங்கும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. மேலும் இதுதொடர்பான வழக்கை அடுத்த 6 மாதத்தில் விசாரித்து முடிக்க தமிழக போலீசாருக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

* தமிழகத்தில் ஆணவக்கொலையா?

கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை நேற்று நடந்து கொண்டிருந்த போது தலைமை நீதிபதி திடீரென ஒரு கேள்வியை எழுப்பினார். அதில்,‘‘ஆணவக் கொலைகள் என்பது அரியானா, உ.பி போன்ற மாநிலங்களில் மட்டும் தான் நடப்பதாக நாங்கள் நினைத்திருந்தோம், ஆனால் இதுபோன்று தமிழகத்திலும் நடக்கிறது என்பதை கேட்கும் போது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தார்’’ என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: