ஊழல் கைதிக்கு விடுமுறை நாட்கள் கிடையாது சசிகலா முன்கூட்டி விடுதலையாக வாய்ப்பில்லை: கர்நாடக சிறைத்துறை உறுதி

பெங்களூரு: ஊழல்  தடுப்பு சட்டத்தின் கீழ் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று  வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று கர்நாடக  சிறைத்துறை தெரிவித்துள்ளது.  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா  மீதான சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி  செய்யப்பட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகள் தண்டனை  பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக சிறைத் துறை நிர்வாகம் கூறி உள்ளது.

இந்நிலையில் சசிகலாவுக்கு  கிடைக்கவேண்டிய விடுமுறை நாட்களை கணக்கிட்டு இந்த மாத இறுதியில்  அல்லது அடுத்த மாதம் விடுதலை ஆவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து  வந்தனர். மேலும் டெல்லி சென்ற டிடிவி தினகரன்  பாஜ தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆர்டிஐ ஆர்வலரான டி.நரசிம்மமூர்த்தி, கர்நாடக சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார். அதில், கைதிகளுக்கு  வழங்கக்கூடிய விடுமுறை நாட்கள் குறித்தும் அவ்வாறு வழங்கப்படும்  விடுமுறைகள் யார் யாருக்கு பொருந்தும் என்றும், சொத்து குவிப்பு வழக்கில்  சிறையில் சசிகலாவுக்கு விடுமுறைகள் பொருந்துமா என்றும் கேள்வி  எழுப்பியிருந்தார்.

அவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம்  வாழ்நாள் சிறை பெற்றுள்ள கைதிகளுக்கு மட்டுமே விடுமுறை நாட்கள் என்பது  பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்  தண்டனை பெற்று உள்ளவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பது பொருந்தாது என்றும்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கர்நாடக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ள  பதிலை அடுத்து சசிகலா அவர்கள் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை  என்று திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

Related Stories: