தேனியில் 2 நிதி நிறுவனங்கள் திடீர் மூடல்!!.. ரூ.150 கோடி முதலீட்டு பணத்துடன் தலைமறைவானதால் பொதுமக்கள் அதிர்ச்சி...உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!!

தேனி: தேனியில் 2 நிதி நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தேனியில் 32 ஆண்டுகளாக இயங்கி வந்த நிதி நிறுவனம் ஒன்று பங்குதாரர் இறந்ததால் மூடப்பட்டது. இதனால் முதலீடு செய்த ரூ.100 கோடி பணத்தை திரும்பப்பெற முடியாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உதயநிலா என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதனை அஜீஸ்கான் உள்ளிட்டோர் கூட்டாக நடத்தி வந்தனர்.

32 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் இயங்கி வந்ததால், கம்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தினர் அதிகளவில் முதலீடு செய்தனர். இதற்கிடையில், அஜீஸ்கான் இறந்து விட்டதால், நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களால் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. வைப்பு நிதி தவிர மாதாந்திர சீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களையும் இந்த நிதி நிறுவனம் நடத்தி வந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சேர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதலீட்டு பணத்தை தருமாறு மற்றொரு பங்குதாரரிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். அதற்கு மற்றொரு பங்குதாரராக ஜமால் என்பவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதேபோல் தேனி நகரில் இயங்கி வந்த மற்றொரு நிறுவனமான ஜெயம் நிதி நிறுவனமும் மூடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்த ராஜேஷ் என்பவர் ரூ.50 கோடி பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்து, தங்களது பணத்தை மீட்டு தருமாறு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: