தரங்கம்பாடி பகுதியில் நேரடி விதைப்பு நிலங்கள் தண்ணீரின்றி காயும் அவலம்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் நேரடி விதைப்பு நிலங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதால் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைமடை பகுதியான தரங்கம்பாடி வட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா விவசாய சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். மஞ்சளாறு, கூடலாறு ஆற்றுபாசனத்தை நம்பி விவசாயிகள் காழியப்பநல்லூர், டி.மணல்மேடு, தில்லையாடி, காட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்குமேல் நேரடிநெல் விதைப்பு முறையில் சம்பா நடவு பணிகளை செய்துள்ளனர். ஆற்றுபாசனத்தை நம்பி உழவு அடித்து நிலத்தை சமன்படுத்தி ஆடுதுறை 46, 38 ரக விதைகளை நேரடி நெல்விதைப்பு முறையில் ஏக்கருக்கு 10 ஆயிரம் செலவு செய்து விதைவிட்டுள்ளனர்.

ஆனால் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் விதைக்கப்பட்ட பயிர்கள் ஒட்டுமொத்தமாக தண்ணீர் இன்றி முளைக்காமலேயே காய்ந்து கருகி வருகிறது. விதைவிட்டு 10 நாட்களாகியும் ஆற்றில் தண்ணீர் வராததால் உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இயற்கையாக பெய்யும் மழையும் கைகொடுக்கவில்லை என்றும், மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை நம்பி விவசாயம் செய்துள்ளதாகவும் உடனடியாக தமிழக அரசு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டு தங்கள் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: