ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அனுமதியின்றி சிலைகள் வைத்த விவகாரம்; முதன்மை காவல் அதிகாரி, 2 ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்: நிர்வாக அதிகாரி அதிரடி

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அதிகாரிகள் அனுமதியின்றி சிலைகள் வைக்க காரணமான கோயிலின் பிரதான அர்ச்சகர், முதன்மை காவல்  அதிகாரி, 2 கோயில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 பேரை நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் பிரசித்திபெற்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 8ம் தேதி அனுமதியின்றி, ஆகம விதிமுறை பின்பற்றாமல் மர்மநபர்கள் யாரோ சிலர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தையொட்டி காசி- ராமேஸ்வரம் சிவலிங்கங்கள் பக்கத்தில் புதியதாக  சிவலிங்கம் மற்றும் நந்தீஸ்வரர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர்.

இந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர் உடனடியாக கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோயிலில்  சம்ப்ரோக்ஷணம் (தூய்மை படுத்துவதற்கான சிறப்பு பூஜைகள்) செய்தனர். மேலும் புதிதாக பிரதிஷ்டை செய்த சிலைகளை சிவன் கோயில் அருகிலுள்ள பரத்வாஜ தீர்த்தம் (லோபாவி) அருகில் உள்ள சிவன் கோயிலில் வைத்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீசில் கோயில் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காளஹஸ்தி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி  தொடர்ந்து விசாரணை செய்தனர். இதுகுறித்து திருப்பதி  நகர எஸ்பி ரமேஷ் கோயிலின் பாதுகாப்பு குறித்து நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அனுமதியின்றி சிலைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காளஹஸ்தி பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் சிவன் கோயில் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டதோடு திருப்பதியிலும்  இதுதொடர்பாக போராட்டங்களை நடத்தினர். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர் கூறுகையில்,  ‘புதிதாக கோயிலுக்குள் சிலைகளை பிரதிஷ்டை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,

போலீசார் மர்ம நபர்களை விரைவில் கைது செய்வார்கள்’ என்றும் கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயில் அதிகாரிகள் 4 பேரை பணியிடை நீக்கம்  செய்து நிர்வாக அதிகாரி சந்திரசேகர் உத்தரவிட்டார். கோயிலின் பிரதான அர்ச்சகர் சம்பந்தம் குருக்கள், முதன்மை காவல் அதிகாரியும்  துணை நிர்வாக அதிகாரியுமான தனபால், கோயில் ஆய்வாளர்கள் வெங்கடமுனி, விஜயசாரதி ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆந்திர மாநில அறநிலையத் துறை உத்தரவின் பேரில் கோயில் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் கோயிலில் புதிய சிலைகளை அனுமதியின்றி பிரதிஷ்டை செய்தவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும் புதிய சிலைகளை கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்தது யார்? அதற்கான காரணம் என்ன என்று  காளஹஸ்தி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிலைகளை பிரதிஷ்டை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ள மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: