துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

பெ.நா.பாளையம்: கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நீலாவதி (73). இவர் தினந்தோறும் அதிகாலையில் அருகே உள்ள வனப்பகுதியையொட்டிய இடங்களுக்கு சென்று பூப்பறித்து வருவது வழக்கம். நேற்று பூப்பறித்து விட்டு திரும்பியபோது எதிரே ஒற்றை காட்டு யானை வந்துள்ளது. இதை கவனிக்காத நீலாவதி யானையின் மீது மோதினார்.

இதனால் ஆவேசமடைந்த யானை மூதாட்டியை தூக்கி வீசியது. படுகாயம் அடைந்த நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த தகவல் அந்த பகுதியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சிவா, தடாகம் எஸ்.ஐ. பொன்ராஜ், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் சரவணக்குமார், கவுன்சிலர் நாகராஜ், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் சி.எம்.குமார், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சண்முகம், ரங்கநாதன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எல்லையில் உள்ள அகழியை அகலப்படுத்தி யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பலியான மூதாட்டி நீலாவதியின் உடலை மீட்ட காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: