பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு இடைப்பாடியில் விவசாயிகள் கைது

இடைப்பாடி: கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகந்திவரை பெட்ரோல், டீசல் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல் படுத்துகிறது. இந்த குழாய் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட 7 மாவட்ட விவசாயிகளும் ஒன்றிணைந்து நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே ராயனம்பட்டி ஒட்டன்காடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் ஷெட் அமைத்தனர்.

திமுக விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ காவேரி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் போராட்டத்திற்கு முயன்ற 18 பேர், ஒன்றிய செயலாளர் சேகரிலோகநாதன் தலைமையில் வந்த 9பேர், ஓமலூர் தாலுகா விவசாய சங்க செயலாளர் அரியகவுண்டர் தலைமையில் வந்த 4பேர் என்று மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தொடர்ந்து வந்த 30பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். அதிகாரிகள் சமரசத்தையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த வந்தவர்கள் அதிகாரிகள் கூறியதை ஏற்று தற்காலிகமாக கைவிட்டனர்.

Related Stories: