நீட் விவகாரத்தால் அவையில் அமளி: சபாநாயகர் உத்தரவையடுத்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்.!!!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டம் நடத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. எனவே, சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள  கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி தொகுதி எம்பி எச்.வசந்தகுமார் மற்றும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன்  உள்ளிட்ட 23 எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இன்றை தினத்திற்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று 2-வது நாளாக அவை தொடங்கியதும், தமிழக அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினர். தொடர்ந்து, அவையில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்று வந்த  நிலையில், நீட் தேர்வு குறித்து அவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் மையப்பகுதியில் கூடி தொடர்ந்து முழக்கமிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து,  அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவையடுத்து அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி, நீட் தேர்வை காங்கிரஸ் ஆதரிப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறினார். இன்பதுரை பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்தோம். திமுக-காங்கிரஸ் கூட்டணியை அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை விமர்சித்ததால் பிரச்சனை எழுந்தது. நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் பேச தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. மத்திய அரசை எதிர்க்க அதிமுக அரசு  அஞ்சுகிறது.  நடவடிக்கைக்கு பயந்து நீட் பற்றி பேச ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். அனைத்து அமைச்சர்களும் ஊழலில் சிக்கியுள்ளதாகவும் ராமசாமி குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக-வுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை பேசிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் தனபால்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: