தனியார் தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், எம்சிஏ உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படித்துவிட்டு சென்னை, மதுரை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். அத்தோடு கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அத்திப்பாக்கம், வழுதலம்பேடு, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வேலையின்றியும், வெளியூருக்கு சென்று வேலை பார்த்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவி அஸ்வினி சுகுமாரன் மேற்கண்ட மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்ககோரி பலமுறை முறையிட்டிருந்தார். இதற்கு நிர்வாகம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று ஊராட்சி மன்ற தலைவி அஸ்வினி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்ககோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்பு தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தையின் மூலம் பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: