மத்திய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 1.75 லட்சம் வீடுகளுக்கு கிரகப் பிரவேசம்: பிரதமர் மோடி பெருமிதம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 1.75 லட்சம் வீடுகளுக்கு நேற்று புதுமனைப் புகுவிழா நடைபெற்றது. ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர் அரசின் உதவியுடன் குறைந்த செலவில் வீடு கட்டுவதற்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளுக்கு நேற்று  ஒரே நேரத்தில்  புதுமனை புகுவிழா நடந்தது. இந்த வீடுகளை காணொலி மூலமாக  திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த வீடுகள் அனைத்தும் சவாலான கொரோனா கால கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. முன்பு ஒரு வீடு கட்ட 125 நாட்களானது. ஆனால், தொற்று காலத்தில் இது 45 முதல் 60 நாட்களாக குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்,  இத்திட்டத்தில் பணியாற்றியதால் இது சாத்தியமானது. வளர்ச்சி திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டுவதில் அரசின் தலையீடு, வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. எனவே, அந்த குறைகளை களைந்து விட்டு, ஏழைகளுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படுவது, ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இனி நிம்மதியாக தூங்குவார்கள்

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடிய மோடி, ஏழ்மையை ஒழிப்பதற்கு, ஏழைகளை வலிமையானவர்களாக மாற்றுவது முக்கியமாகும். இத்திட்டம் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்துள்ளது. நாள் முழுவதும் உழைத்து களைத்து வீடு திரும்பும் அவர்கள் இனி நிம்மதியாக தூங்குவார்கள்,’’ என்றார்.

தேர்தலில் நிற்க போகிறீர்களா?

குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த நரேந்திர நாம்தியோ என்பவர் மோடியுடன் பேசிய போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, முத்தலாக் ஆகியவற்றை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை பாராட்டினார். கிராமத்தை சேர்ந்தவராக இருப்பினும், அவருக்கு இருந்த அரசியல் அறிவை பார்த்து வியந்த பிரதமர் மோடி, ``பல பிரச்னைகள் குறித்து தெரிந்து வைத்துள்ளீர்களே, தேர்தலில் நிற்க போகிறீர்களா?’’ என்று நகைச்சுவையுடன் கேட்டார்.

Related Stories: