தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமா?

தேனி :  தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக வைகை அணை பூங்கா, சுருளி அருவி, கும்பக்கரை அருவி உள்ளன. இதில் வைகை அணை அனைத்து தரப்பினராலும் கவரப்பட்ட சுற்றுலா தலமாக உள்ளது.

இங்கு சிறுவர்கள், குடும்பங்களை மகிழ்விக்க அழகிய புல்வெளிகள் நீரூற்றுகள், ரயில் வண்டி, நீச்சல் குளம், படகு சவாரி, சறுக்குகள், ஊஞ்சல்கள் உள்ளன.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் விழாக்காலங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கான பருவ விடுமுறை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து குவிவதுண்டு.  இதேபோல, சுருளி அருவிக்கும், கும்பக்கரை அருவிக்கும் நீர்பெருக்கெடுக்கும் போதெல்லாம் அருவியில் குளித்து மகிழ நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சுற்றுலா தலங்கள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டன.

தேனி மாவட்டத்திலும் வைகை அணை பூங்கா, சுருளி அருவி, கும்பக்கரை அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு  மூடப்பட்டன.   தற்போது ஊரடங்கில் அதிக தளர்வுகளை விதிமுறைகளுடன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பொது போக்குவரத்து துவங்கப்பட்டதுடன், ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் சென்று வர அனுமதியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கொடைக்கானல் சென்று வர திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.  எனவே தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: