ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'கோவிஷீல்டு'கொரோனா தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்; பக்க விளைவு ஏற்படுத்துவதாக தகவல்..!!

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை இந்தியாவில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை., ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு சிலருக்கு பக்க விளைவு ஏற்படுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா என்ற பிரிட்டன் மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தடுப்பு மருந்து கோவிஷீல்டு.

இந்த மருந்துக்கான பரிசோதனைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையின்போது பரிசோதனையில் பங்கேற்ற நபருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன என்று ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும், இந்த தடுப்பு மருந்துக்கு இரண்டாம் கட்ட சோதனை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட 17 மையங்களில் இந்தியா முழுவதும் 1600 பேருக்கு இந்த தடுப்பு மருந்தின் சோதனை நடத்த திட்டமிடப்படிருந்தது. இந்தநிலையில், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு, இந்தியாவில் கோவிஷீல்டு சோதனை நடத்துவதை நிறுத்தவேண்டும் என்று இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் செரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: