நெல்லை சந்திப்பில் கழிப்பறைகளே இல்லை ‘அவசரத்திற்கு’ ஒதுங்க முடியாமல் தவிக்கும் பயணிகள்

நெல்லை: நெல்லை சந்திப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக அவசரத்திற்கு ஒதுங்க கழிப்பறைகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயிலில்  இறங்கி வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக ரயில் இயக்கம் இல்லை. ஊரடங்கு தளர்வால் கடந்த 7ம் தேதி முதல் நெல்லையில்  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்டர்சிட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் இறங்கி வரும் பயணிகள் முன்பு போல  ஆட்டோக்களில் பயணித்து மாநகர பகுதிகளுக்கு செல்கின்றனர். பல பயணிகள் நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே வந்து பஸ் ஏறி  வெளியூர்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் நெல்லை சந்திப்பில் அவசரத்திற்கு ஒதுங்க ஒரு கழிப்பறை கூட இல்லாதது பயணிகளை திண்டாட வைக்கிறது. அதிலும் பெண்  பயணிகள் கழிவறைகளை தேடி அலைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் காணப்படும் கழிப்பறை  ஒப்பந்த பிரச்னைகள் காரணமாக தற்போது பூட்டி கிடக்கிறது. வெளியே சென்று இயற்கை உபாதை கழிக்கலாம் என பயணிகள் ரயில் நிலையத்தை  விட்டு வெளியேறினால், எங்குமே கழிப்பறைகள் தென்படுவதில்லை.

நெல்லை சந்திப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி பஸ்  நிலையத்தில் இருந்து கழிப்பறைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இடிக்கப்பட்டு விட்டன.  த.மு.சாலையில் இருந்த கழிப்பறை இரு  தினங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இடிக்கப்பட்டது. ரயில் நிலைய வாகன காப்பகம் அருகே இருந்த மொபைல் கழிப்பறை தண்ணீர்  தட்டுப்பாடு காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது. இதனால் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

ஆண் பயணிகளாவது ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள காலியிடங்களில் அவசரத்திற்கு ஒதுங்க வழியுள்ளது. பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு  மத்தியில் வெளியூர்களுக்கு பயணிக்கின்றனர். எனவே நெல்லை சந்திப்பு பகுதியில் தற்காலிக கழிவறை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம்  முன் வர வேண்டும்.

Related Stories: