அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது... உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் : ஏ.ஐ.சி.டி.இ. எச்சரிக்கை!!

சென்னை : தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது. தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருந்ததாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்றும், ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30ந் தேதி ஏஐசிடிஇ அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், இறுதி ஆண்டு மாணவர்கள் அரியர் தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏஐசிடியின் இந்த கடிதம்,  மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மாணவ சமுதாயத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: