14 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் மகன் கைது

தண்டையார்பேட்டை: நகைக்கடையில் 14 கிலோ தங்க நகைகள் கொள்ளைபோன வழக்கில், திடீர் திருப்பமாக நகைக்கடை உரிமையாளரின் மகனே கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் (42), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சுபாஷ் போத்ரா (57). இவர்கள் இருவரும் சவுகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலை, வீரப்பன் தெரு பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருகின்றனர். மொத்தமாக தங்க கட்டிகளை வாங்கி நகைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி கடையில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, 14 கிலோ தங்க நகைகளை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், யானைக்கவுனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரித்தனர். இதில், நகைக்கடை உரிமையாளர் சுபாஷின் மகன் அர்ஸ் போத்ரா (24) கள்ளச்சாவி மூலம் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அர்ஸ் போத்ரா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ₹7 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: