கொரோனா பாதிப்பு, எதிர்ப்புக்கிடையே ஜேஇஇ மெயின் நிறைவடைந்தது அடுத்ததாக 13ம் தேதி நீட் தேர்வு: சமூக இடைவெளியுடன் தீவிர ஏற்பாடு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மற்றும் அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஜேஇஇ மெயின் தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. அடுத்ததாக, வரும் 13ம் தேதி நாடு முழுவதும் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகள் மே 3ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால், இத்தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்தது.

இதன்படி, ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையிலும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும் நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், மாணவர்கள் உயிரை பணயம் வைத்து இத்தேர்வுகளை நடத்தக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வழக்கு தள்ளுபடி ஆனதால், திட்டமிட்டபடி ஜேஇஇ தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் இத்தேர்வு முடிந்த நிலையில், அடுத்ததாக வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 15.97 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை முழுமையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

ஒரு அறைக்கு 12 பேர் மட்டுமே

* சமூக இடைவெளியை உறுதிப்படுத்த, தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,546ல் இருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* தேர்வு அறையில் 24 மாணவர்களுக்கு பதிலாக வெறும் 12 பேர் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள்.

* தேர்வு அறைக்கு வெளியிலும், தேர்வறைக்கு மாணவர்கள் நுழையும் போதும், வெளியேறும் போதும் சமூக இடைவெளி பின்பற்றுவது உறுதி செய்யப்படும்.

* தேர்வு மைய நுழைவாயிலிலும் தேர்வறையிலும் சானிடைசர் வைக்கப்படும்.

* மாணவர்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் கொண்டு வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மையத்திற்குள் நுழைந்ததும் மாணவர்களுக்கு 3 லேயர் மாஸ்க் தரப்படும். அதனை அணிந்து செல்ல வேண்டும். மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது பற்றி வழிகாட்டு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

* மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்யும்படி அனைத்து மாநில அரசுகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளோம். - தேசிய தேர்வு முகமை அதிகாரிகள்

Related Stories: