பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி சிபிசிஐடி விசாரணை தீவிரம் மேலும் 6 பேர் கைது: அதிகாரிகள் தொடர்பு பற்றி வாக்குமூலம்

சென்னை: தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய வேளாண்மை அலுவலக தற்காலிக பணியாளர் ராஜா (30), கடந்த 3ம்தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, 14 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் 51 பேர் மீது, அரசு பணத்தை முறைகேடாக கையாடல் செய்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தனியார் கணினி மையங்களில் பயனாளிகள் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டதில், போலி ஆவணங்களை இணைத்து வெவ்வேறு மாவட்டங்களில் விவசாயம் செய்வதாக பதிவிட்டு, மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்டத்தில் 20 வட்டார வேளாண் அலுவலகங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தாரமங்கலம் வட்டாரத்தில் 2 தனியார் கணினி மையத்தில் 160 பயனாளிகள் பெயரை, போலி ஆவணம் இணைத்து பதிவேற்றம் செய்த ராகுல், கலையரசன் ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் 4 பேர் கைது: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு தலைவி ஜீவாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கணினி மையத்தில், விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்ததாகவும், அதற்கு அங்கு வருவாய்த்துறையில் பணியாற்றும் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட கணினி மையத்தில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், சங்கராபுரம் தாலுகா அலுவலக உதவியாளரான அத்தியூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், அஜீத், பகன்டை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், ஜம்போடை கிராமத்தில் கணினி மையம் நடத்தி வரும் முகிலன் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சிலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

* 42,882 பேரின் தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை

தமிழகத்தில் பி.எம் கிசான் உதவித்தொகை பெற்றவர்களில் மேலும் 42 ஆயிரத்து 882 பேரின் தகவல்களை சரிபார்க்க வேண்டியது உள்ளது. இந்த விபரங்களை உடன் சரிபார்த்து பட்டியலை அனுப்ப வேண்டும் என்று வேளாண்மை இயக்குநர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: