போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகை ராகிணி திவேதி, 11 பேர் மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடகாவில் போதை பொருள் மாபியா கும்பலுடன் தொடர்புள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கன்னட நடிகை ராகிணி திவேதியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போதை பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பில் இருந்த புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சிவபிரகாஷ், ஆதித்யா ஆல்வா, ராகுல் உள்பட 12 பேர் மீது போதை பொருள் தடுப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கைதாகியுள்ள நடிகை ராகிணி திவேதி தேர்தலின் போது பாஜவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர் என்றும், போதை பொருள் விற்பனை பணத்தை கொண்டு தான் காங்.-மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கூட்டணி ஆட்சியை பாஜ கவிழ்த்தது என்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இதற்கு பாஜ அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், எந்த கட்சிக்கு ஆதரவானவராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் குமாரசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

மேக்னா ராஜ் கண்டனம்: இதற்கிடையே, மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கும் போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் பொய் புகார் கூறியிருப்பதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

* தமிழ் நடிகை சகோதரி கைதாகிறார்

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ராகுலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் அவரது நண்பர்களின் நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். விரைவில் சஞ்சனா கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் சான்டில்வுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சஞ்சனா பிரபல நடிகை நிகி கல்ராணியின் சகோதரியும், தமிழ் படங்களில் நடித்தவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: