பிசிசிஐ மருத்துவக்குழு உறுப்பினருக்கு கொரோனா

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ள பிசிசிஐ மருத்துவக்குழுவின் மூத்த உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் செப்.19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. அதற்காக ஐபிஎல் அணிகளும், பிசிசிஐ நிர்வாகக் குழுவினரும் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர். சிஎஸ்கே வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில்  பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அவர் யார் என்ன என்ற விவரங்களை பிசிசிஐ வெளியிடவில்லை.

அவருக்கு நோய் அறிகுறிகள் இல்லை. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் யாருடனும் தொடர்பில் இல்லாததால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை. விமானத்தில் வரும்போது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.

Related Stories: